ஒட்டாவா: கனடாவின் டொராண்டோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் இந்து மகா சபைக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்த கோயிலில் வரும் 17 ஆம் தேதி இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, நவம்பர் 3 அன்று, பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வந்த பக்தர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, '' கனடாவில் வேண்டுமென்றே இந்துக் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது தூதர்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் மிகவும் பயங்கரமானவை. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிசெய்து சட்டத்தை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்! பொதுமக்கள் அச்சம்
இந்த சூழலில் கனடாவில் உள்ள இந்துக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், நவம்பர் 17 ஆம் தேதி நடக்கவிருந்த இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிராம்ப்டன் இந்து மகா சபை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பீல் பிராந்திய உளவுத்துறை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், நவம்பர் 17, 2024 அன்று இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி மந்திரில் நடைபெறவிருந்த சான்றிதழ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் இதற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பிராம்டன் கோயிலுக்கு எதிரான அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனடாவின் இந்து சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் பீல் காவல்துறையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்