ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் என்றால் அதில் நிச்சயம் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.
அப்படி இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நிகழ்ந்த டாப் 10 சர்ச்சை சம்பவங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
மங்கிகேட்:
மங்கிகேட், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நடந்த மிக மோசமான சம்பவங்களுள் ஒன்று. 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சை குரங்கு என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் திட்டியதாக சர்ச்சை வெடித்தது.
நிற வெறியை தூண்டும் வகையில் ஹர்பஜன் சிங் பேசியதாக புகார் எழுந்த நிலையில், மூன்று ஆட்டங்களுக்கு அவர் தடை செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
2. சிட்னியில் நடுவரால் ஏற்பட்ட சர்ச்சை:
2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களின் முடிவு சர்ச்சையை கிளப்பியது. மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் கலந்து பேசி இந்திய வீரர்களுக்கு முடிவு அறிவிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை புகார்கள் நடுவர்கள் மீது தொடரப்பட்டன. மொத்தம் நான்கு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3. கவாஸ்கரை வம்பிழுத்து வாங்கிக் கட்டிய தருணம்:
1981ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் எல்பிடபிள்யூ முறையில் ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லியால் அவுட் செய்யப்பட்டார். இருப்பினும், கள நடுவர் தவறாக அவுட் வழங்கியதாக அதிருப்தியில் சென்று கொண்டு இருந்த கவாஸ்கரை, வசைபாட தொடங்கினார் டென்னிஸ் லில்லி. இதனால் கோபமடைந்த கவாஸ்கர் தனது பார்டனர் சேத்தன் சவுஹனையும் பெவிலியனுக்கு உடன் அழைத்துச் சென்றார்.
அந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வீரர்கள் மீண்டும் விளையாட வந்தனர். அந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
4. டாஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறு:
2001 ஆம் ஆண்டு டெஸ்ட் சீரிஸின் போது, இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி டாஸ் போட வருவதில் காலம் தாழ்த்துவதாகவும், தன்னை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் ஸ்டீவ் வாக் குற்றச்சாட்டு இருந்தார். பின்னர் இதற்கு விளக்கம் அளித்த சவுரவ் கங்குலி, டாஸ் போடும் போது இரு அணிகளின் கேப்டன்களும் பிளேசர் (கோட் சூட்) அணிய வேண்டும் என்பதால் தன்னுடைய பிளேசரை தேடிக் கொண்டு இருந்ததால் கால் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.
5. சச்சினுக்கு இழைக்கப்பட்ட அநியாயம்:
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது கிளென் மெக்ஹரத் வீசிய பந்து சச்சின் தெண்டுல்கரின் தோளில் உரசிச் சென்றது. இதை அவுட்டாக கூறும்படி ஆஸ்திரேலிய வீரர்கள் முறையிட்டதை அடுத்து நடுவரும் அவுட் வழங்கினார். என்னை நடக்கிறது என்று தெரியாமலேயே சச்சின் டக் அவுட்டாகி வெளியேறினார். மேலும், அந்த காலக் கட்டத்தில் சச்சினுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என இந்த சம்பவம் கூறப்பட்டது.
6. ராகுல் டிராவிட் - மைக்கேல் ஸ்லேடர் சண்டை:
2001 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் - மைக்கேல் ஸ்லேடர் ஆகியோரிடையே நடந்த சண்டை பேசு பொருளாக மாறியது. டிராவிட் அடித்த பந்தை மைக்கேல் ஸ்லேடர் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இருப்பினும் ராகுல் டிராவிட்டுக்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. ஸ்லேடர் சரியாகத் தான் கேட்ச் பிடித்தாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்ததால் அதை ரீபிளே செய்ய நடுவர் கூறினார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் ராகுல் டிராவிட்டுக்கு அவுட் வழங்கப்பட்டது. இதனால் சற்று நிதானத்தை இழந்த மைக்கேல் ஸ்லேடர் ராகுல் டிராவிட் மற்றும் நடுவரிடம் கோபத்தில் கத்தினார். இருப்பினும், மிஸ்டர் கூல் டிராவிட் எதையும் சட்டை செய்யாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் வெட்கி தலை குனிந்த மைக்கேல் ஸ்லேடர் பின்னர் ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கோரினார்.
7. ரசிகர்களை நோக்கி விராட் கோலியின் மோசமான செயல்:
2012 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு சென்ற விராட் கோலி, மைதானத்தில் நிரம்பி இருந்த அந்நாட்டு ரசிகர்களின் அட்ராசிட்டியால் எரிச்சலடைந்த அவர்களை நோக்கி கை விரலை கொண்டு சைகை செய்தார். இது மறுநாள் அந்நாட்டு செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. இருப்பினும், விராட் கோலிக்கு விளையா தடை விதிக்கப்படவில்லை. அபராதத்துடன் தப்பினார்.
8. கம்பீர் - வாட்சன் தகராறு:
2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் விளையாடியது. டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கம்பீர் ரன் எடுக்க ஓடும் போது அவரது முகத்தில் தனது முழங்கையால் ஷேன் வாட்சன் வேணுமென்றே இடிப்பது போன்று தோன்றியது.
இதனால் இருவரிடையே கடும் வார்த்தை போர் நிலவியது. இருப்பினும் அந்த ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசி கவுதம் கம்பீர் தன்னை யார் என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிரூபித்து காட்டினார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுடனான நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவுதம் கம்பீர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
9. மைதானத்தில் பியர் பார்ட்டி:
இந்த சம்பவம் இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இடையே நடந்தது அல்ல, மாறாக இந்திய அணியின் துணை ஊழியர்களால் நடந்தது. 2012 ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் இந்திய அணியின் துணை ஊழியர்கள் பியர் பார்ட்டியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவம் பெரும் விவாதமாக செய்தித் தாள்களில் எழுதப்பட்டன.
10. டிராவிட் காதுகளில் வடிந்த ரத்தம்:
2004ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ வீசிய பந்து ராகுல் டிராவிட்டின் ஹெல்மட்டை தாண்டி அவரது காதுகளை பதம் பார்த்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் காதுகளில் இருந்து ரத்தம் வடிந்தது. இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தொடர்ந்து விளையாட மறுத்ததால் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் அந்த போட்டி ஆஸ்திரேலிய நட்சத்திரம் ஸ்டீவ் வாகின் கடைசி போட்டியாகும். வெற்றியுடன் அவரை வழியனுப்ப காத்திருந்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படிங்க: "இதற்காகத் தான் லக்னோவில் இருந்து விலகினேன்"- மனத் திறந்த கே.எல். ராகுல்!