கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் மணியகாரன்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த 8 பெண்கள் உள்பட 14 கூலித் தொழிலாளர்கள் சேனைக்கிழங்கு அறுவடைசெய்ய சென்றனர்.
அறுவடை செய்த சேனைக் கிழங்குகளை கோபிசெட்டிபாளையம் வேட்டைகாரன் கோயிலில் செயல்படும் சேனைக்கிழங்கு குடோனுக்கு மினி சரக்கு வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. அதே வாகனத்தில் 14 கூலித் தொழிலாளர்களும் கிழங்கின் மேல் அமர்ந்து பயணித்தனர்.
அப்போது, வாகனம் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணம் மேற்கொண்ட 14 பேரில் நித்தியா என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 13 பேர் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சேனைக்கிழங்கு அறுவடைக்குச் சென்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 13 பேர்கள் படுகாயமடைந்து, ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.