ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் வந்தார். மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பெருந்துறையில் 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனால் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் பெருந்துறை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்க முடியும். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் முழுவதும் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் கோபிச்செட்டிப்பாளையம் விவசாயிகள் தவறாக எண்ண வேண்டாம். இது தொடர்பாக நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவிக்க இருக்கிறேன். ஒரு மாவட்டத்தில் தண்ணீர் கொடுப்பதில் பாகுபாடு காட்டினால் எப்படி வேற்று மாநிலத்தவரிடம் தண்ணீர் பெறமுடியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை போக்க தண்ணீர் எடுத்துவரும் நிலையில் இதற்கு மட்டும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது முறையில்லை. இந்த திட்டம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு அணை பகுதியில் விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்றும், அது தொடர்பாக குழு சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் திட்டம் கொண்டு வரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்" என்றும் கூறினார்.