ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹடா பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று மாசிமகம் எனும் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஆதி கருவண்ணராயர் உப்பிலிய நாயக்கர் சமூகத்தினரின் குல தெய்வமாகும். வழக்கமாக இவ்விழாவின்போது ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா இன்று (பிப்.26) தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. வனப்பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கோயிலுக்கு செல்வதற்காக 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் பவானிசாகர் அருகே உள்ள காராட்சிக்கொரை சோதனை சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானங்கள் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பொதுமக்களை தாக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை!