ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈவேரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலாவதியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியான தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்வது விதியாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி காலியான ஒரு மாதத்திற்குள்ளே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கில் போட்டியிடும் கட்சிகளை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் அல்லது உயிரிழந்த திருமகன் ஈவேராவின் மனைவி பூர்ணிமா அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம், அதிமுக தலைமையிலான கூட்டணியில், முதலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இருந்த நிலையில், இறுதியில் அதிமுகவே நேரடியாக களம் காண உள்ளது. அதேநேரம் அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சிக்கல் நிலவுவதால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஈபிஎஸ், மற்றும் ஓபிஎஸ் அணிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க. ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு முறையிடலாம் என எதிர்பார்க்கிறது. மேலும் தேசியக் கட்சியான பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவையில் தங்கள் பலத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்றக் கட்சிகளான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த நகர்வுகளை வெளிக்காட்டாமல் அமைதி காத்து வருகிறது. மறுபுறம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் மும்முனை முதல் 5 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு, ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
டிடிவி தினகரன் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு தான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் விரும்புவதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளோடு போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வரும் 27ஆம் தேதி அறிவிப்பு வெளியிடுவதாக கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகவும் அதற்குத் தேவையான பணிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுகவை பொறுத்தவரையில் இரட்டை இலை சின்னம்தான் தற்போது தலைமை தாங்கி இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி பண பலத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட பயப்படவில்லை என்றும்; ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவை டெபாசிட் இழக்க செய்ததும் தாங்கள் தான் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா கூறிக் கொண்டிருக்கும் சூழலில் அவரை எப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரசாரத்திற்கு அழைப்பது என்று கூறிய டிடிவி தினகரன், தேர்தல் தோல்வியைக் கண்டு தாங்கள் துவண்டு போகவில்லை என்றும்; கஜினி முகமது தொடர்ந்து படையெடுத்தது போல தொடர்ந்து தேர்தலை சந்திப்போம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக-பாஜக நாளை பேச்சுவார்த்தை..