ஈரோடு: சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் கடம்பூர் மலைப் பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவு பெற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் அடுத்துள்ள காசிகாடு பகுதியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பணிக்காக அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு, அங்கு கூடி இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 30 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு இல்லாமல், லாரிகள் மூலம் குடிநீர் பெற்று வந்த காசிகாடு பகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர் நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானத்துக்குப் போட்டிப் போடும் ஆம்னி பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி..!
தொடர்ந்து பேசிய அவர், "நீண்ட காலமாக ஈரோடு, தருமபுரி, நீலகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இன மக்கள், 1951 வரை பழங்குடியினர் பட்டியலில் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது, அம்மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது.
அது குறித்து, கடந்த ஆறு மாத காலமாக ஆய்வுகள் செய்யப்பட்டு, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பழங்குடியினரின் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய பழங்குடியினர் ஆணையமும் ஆய்வு மேற்கொண்டு, மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என முகாந்திர அனுமதி அளித்துள்ளது.
விரைவில் மலையாள இன மக்கள் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" எனக் கூறினார். பின்னர், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக முதலீடு ஈட்டியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, "பாராட்டிதான் ஆக வேண்டும். வேறு வழி" என்று நகைப்புடன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் போராட்டம்.. மாநிலம் முழுவதும் 113.16 சதவீத பேருந்துகள் இயக்கம்!