ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது இளைய மகனான கார்த்திக் (27) வேலைக்கு எதுவும் செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தந்தை காசிலிங்கத்திற்கும், கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியில் சென்ற கார்த்திக் அதிகளவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கார்த்திக், வீட்டிலிருந்த எரிவாயு உருளையை எடுத்து பற்ற வைத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுதுள்ளார். அதனைப் பார்த்து அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கவுந்தப்பாடி காவல்துறைக்கும், கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரு துறையினரும் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு கார்த்திக், "தனது தந்தையை கைது செய்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருவேன், இல்லையென்றால் சமையல் எரிவாயு உருளை இரண்டு உள்ளது, இரண்டையும் பற்ற வைத்து தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அதன் பின்னர் கார்த்திக் வீட்டின் அருகில் இருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி அய்யம்பாளையம் முழுவதும் மின் விநியோத்தை நிறுத்தினர். இரவானதும் அய்யம்பாளையம் பொதுமக்கள் வீட்டிற்குள் செல்லமுடியாமலும், மின் வசதியில்லாமலும், சமையல் செய்ய முடியாமலும் அவதியுற்றனர்.
கார்த்திக் வீடு பழங்காலத்து வீடு என்பதாலும், ஓடு வேய்ந்த மேற்கூரை என்பதாலும் தீயணைப்புத்துறையினரால் அதிரடி முடிவு எடுக்கமுடியாமல் திணறினர். மேலும் தொடர்ந்து கார்த்திக்கிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் வீட்டின் முன்பகுதிக்கு கார்த்திக்கை வரவழைத்து தேநீர் பருகக் கொடுப்பது போல், நடித்து அதிரடியாக கையைப் பிடித்து இழுத்து வெளியில் தூக்கி வந்தனர்.
இதைப்பார்த்த அய்யம்பாளையம் கிராம மக்கள் கார்த்திக்கிற்கு தர்ம அடி கொடுக்க முற்பட்டனர். கவுந்தப்பாடி காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கார்த்திக்கை காவல்துறை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்பு கார்த்திக்கை காவல்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்