ஈரோடு, சுற்றுவட்டாரங்களிலுள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக ஆளில்லாதவர்களது வீடுகளின் பூட்டுகளை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் திருடுபோவது அதிகரித்ததுவந்தது. இதனால் தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட திருடர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் ஈரோடு தாலூகா காவல் துறையினர், தனிப்படையினர் நேற்றிரவு ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதுடன் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்லவும் முயற்சித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளைஞரைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் ஈரோட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு அங்கு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கடந்த மாதத்தில் திருமணத்திற்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைத் திருடியதும் தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்து 56 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
அதுபோல் அவர் மீது ஈரோடு மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களிலும் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட வெங்கடேஷ் கொடுத்த தகவலின்பேரில் திருட்டில் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது!