ஈரோடு: தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதால், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப்பாலுக்கு ரூ.51 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிடத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக நாளை மறுதினம், 28 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு கால அவகாசம் கேட்டுள்ளதால் போராட்டத்தை நவம்பர் 7 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஈரோட்டில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பால் கொள்முதல் விலையை மட்டுமன்றி ஆவின் பால் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க, பால் விற்பனை விலையையும் உயர்த்திட அவர்கள் வலியுறுத்தினர். கடந்த 20 ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1037ஆவது சதய விழாவிற்கு நடப்பட்ட பந்தல்கால்