ஈரோடு: பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கோகிலா சேகர் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மகப்பேறு மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது.
இதன் அடிப்படையில் ஆட்சியர் கிருஷ்ணணுன்னி மருத்துவ கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தினர். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
இதில் மருத்துவமனையில் மயக்கமருந்து மற்றும் தடுப்பூசிகள் காலாவதி ஆகி இருப்பதும், விதிமுறைகளை மீறி படுக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும் ஸ்கேன் சென்டருக்கு தனியாக அறை ஒதுக்கப்படாமல் சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு வருவாய் துறையினருடன் சீல் வைத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் தடை விதித்தனர்.
இதையும் படிங்க: Video Leak - அரசு விதிமுறைகளை மீறி நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்!