ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் (Erode East By Election) வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி துவங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பிரதான கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உட்பட 96 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடைசி நாளான நேற்று (பிப்.7) அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட சுயேட்சைகள் 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்த சுயேட்சைகளில் எம்டெக் முடித்த அமெரிக்காவில் பணிபுரிந்து தற்போது ஆன்மீகவாதியாக அகில இந்தியத் திருமேனி கட்சி தொண்டர் ராமலிங்கம் என்பவரும் ஒருவர் ஆவார். அதேபோல், கோபிசெட்டிபாளையம் நாகதேவம்பாளையம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாற்றி வந்த சித்ரா என்பவர் தான் தூய்மைப்பணியாளர் பணியிலிருந்து நிரந்தரமாகப் பதவி விலகி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு பரிசீலனை: இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே, மீதமுள்ள 91 பேர் சுயேட்சையாக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனையானது நடைபெற உள்ளது. வருகிற 10ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அமமுக வாபஸ்: இதனிடையே, அமமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளதால் அக்கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சிவப்பிரசாத் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவுள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்கிய அமமுக.. டிடிவி தினகரன் கூறிய காரணம் என்ன?