ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ். இவர் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 8ஆம் தேதி இரவு, இவரது வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அவரது மனைவி ரீனா, மகன் சூரஜ் ஆகியோரை மிரட்டி, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பாலமுருகன், விஜயலட்சுமி ஆகியோரை தாக்கிவிட்டு தங்க நகைகள், பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் , இது குறித்து சஜீவ் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதில் சத்தியமங்கலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்திவந்த வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வந்தனர்.
சத்தியமங்கலம் பகுதியிலுள்ள திம்மையன் புதூர், ரங்கசமுத்திரம், அரியப்பம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தவா என்கிற தவேந்திரன், தனுஷ், சௌடேஸ்வன், அருள்தாஸ், புவனேஸ்வரன், ஸ்ரீநாத், மகேந்திரன், முத்து ஆகிய 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 9 பேரில் தனுஷ், சவுடேஸ்வரன், அருள்தாஸ், புவனேஸ்வரன், ஸ்ரீநாத் ஆகிய 5 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்னொரு குற்றவாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.