ஈரோடு: சாஸ்திரி நகர்ப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் நிறைந்துள்ளன. அங்கு நேற்று (நவ. 13) மாலை சாலையோரத்தில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சாக்குப் பையை தெருநாய்கள் சுற்றிவந்துள்ளன.
இதனையடுத்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் இது குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தகுமார், வட்டார காவல் துறையினர் சாலையின் ஓரம் கிடந்த சாக்குப் பையைப் பிரித்துப் பார்த்தனர்.
அப்போது 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த ஈரோடு வட்டம் காவல் துறையினர் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குப் உடற்கூராய்வு செய்ய அனுப்பிவைத்தனர்.
மேலும், எதற்காகக் கொலைசெய்யப்பட்டார், வேறு எங்கேனும் கொலை செய்துவிட்டு இங்கு வீசிச் சென்றனரா அல்லது அருகில் உள்ள குடியிருப்புவாசியைச் சேர்ந்தவரா எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவைக் கொண்டும் சோதனை செய்துவருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் சாக்கு மூட்டையில் பெண் உடல் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : செல்போன் தராததால் சிறுமி தற்கொலை?