ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள தாசரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (10), பூவரசன் (9), உதயகுமார் (10), நிவேஷ் (8) ஆகிய நான்கு சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்துவருகின்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இவர்கள் நான்கு பேரும் அப்பகுதியில் உள்ள சாலையோர வேலியில் காட்டாமணக்குச் செடியிலிருந்த காய்களைக் கொய்யாக்காய் போலவே இருந்ததால் அதனைப் பறித்துத் தின்றுள்ளனர்.
இது விஷ காய்கள் என்பதால் காய்களைத் தின்ற சிறிது நேரத்தில் நான்கு சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அவர்களது பெற்றோர், கிராம மக்கள் நான்கு பேரையும் உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் நான்கு பேரையும் கண்காணித்துவருகின்றனர்.
இதனிடையே, விஷ காய்களைத் தின்ற நான்கு சிறுவர்களும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளி விடுமுறை நாளில் நான்கு சிறுவர்கள் விஷ காய்களைத் தின்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 2022 புத்தாண்டு: சிட்னியில் வானத்தை வண்ணமயமாக்கிய வான வேடிக்கைகள்