ஈரோடு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் இன்று (செப்.19) இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இன்று 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் இன்று 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. மதியம் 12.20 மணி நிலவரப்படி 6 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 45 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 530 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 43 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இம்மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 59%. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 15% உள்ளது.
இதுவரை 24,100 பேருக்கு ஆலோசனை
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 330 மனநல மருத்துவர்களைக் கொண்டு தொலைபேசி வாயிலாக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 24 ஆயிரத்து 100 மாணவர்களிடம் பேசியுள்ளளோம். இன்னும் 10 நாட்களில் அனைத்து மாணவர்களிடமும் பேச அறிவுறுத்தியுள்ளளோம்.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் கட்டுமான பணிகள் முடிந்தப்பின் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா தொற்று முற்றிலும் குறையும் வரை அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் அதுவே மூன்றாம் அலையை தவிர்பதற்கான வழி.
ஒன்றிய அரசுக்கு பாராட்டு
பிரதமர் மோடியின் பிறந்தநாளன்று 2.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தி உலக அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திய நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றது. இதற்கு ஒன்றிய சுகாதாரத்துறைக்கு பாராட்டுக்கள்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து பாறைகள் வழங்க வேண்டும் - கேரள அமைச்சர் கோரிக்கை