ஈரோடு: ஈரோடு அருகே நசியனூர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், நேற்று இவரது குடும்பத்தைச் சேர்ந்த மனைவி தாமரைச்செல்வி, தங்கை சிவகாமி மற்றும் நான்கு வயது மகள் தர்ஷினி ஆகியோர் வேலை நிமித்தமாக ஈரோட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில், வில்லரசம்பட்டி பிரிவில் உள்ள தனியார் பேக்கரியில் மூன்று பேரும் முட்டை பப்ஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு தாமரைச்செல்வி, சிவகாமி மற்றும் சிறுமி தர்ஷினி ஆகிய மூன்று பேருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூன்று பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அருண் தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் பேக்கரியில் இன்று (அக்.18) சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த கடையில் இருந்த முட்டை பப்ஸ்கள் உள்ளிட்டவைகளை சோதனைக்காக எடுத்துச்சென்ற அதிகாரிகள், சோதனையின் முடிவு தெரியும் வரை உணவு பொருட்கள் தயாரிப்பை நிறுத்துமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.
தனியார் பேக்கரியில், பப்ஸ் சாப்பிட்ட மூன்று பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய சிறுமியின் தந்தை, நேற்றிரவு திடீரென சிறுமி மற்றும் வீட்டில் இரண்டு பெண்களுக்கும் கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் இதனால், தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்காக கொண்டு சென்றதாகவும், பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்காக மருத்துவர்கள் அனுப்பியதாகவும் கூறினார். மேலும், தனியார் பேக்கிரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்டதால் தான், இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறுவதாக தெரிவித்த அவர், இனி யாருக்கும் இது போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால் உணவு பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்து வரும் நிலையில், அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் படுகாயம்… சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மக்கள் கோரிக்கை!