தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இங்கு விநியோகிக்கப்படும் அரசி தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டுமென்பதால் கடந்த சில மாதங்களாக தஞ்சாவூர், சீர்காழி, நாகப்பட்டினம் உள்ளிட்ட வேளாண் மாவட்டங்களிலிருந்து அரிசி தருவிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி அடுத்துவரும் மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதற்கு அரிசி மூட்டைகள் சீர்காழியிலிருந்து சரக்கு ரயில் மூலம் ஈரோடு சரக்கு ரயில் நிலையத்திற்கு வந்ததடைந்தன.
50 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் டன் அரிசி மூட்டைகளை 50-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளில் இறக்கி அடுக்கிவைத்தனர்.
பின்னர் 2 ஆயிரம் டன் அரிசி மூட்டைகளும் பாதுகாப்புடன் ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
கிடங்குகளில் இறக்கிவைக்கப்படும் பச்சரிசி மூட்டைகள் மாவட்டம் முழுவதுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நாளை (அக். 1) அல்லது நாளை மறுநாள் கொண்டுசெல்லப்பட்டு வழங்கப்படவுள்ளதாகவும், கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லப்படும் அரிசி மூட்டைகள் பரிசோதனைகளுக்குப் பிறகே நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.