தமிழ்நாடு முழுவதும் கரோனோ வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கோயம்புத்தூர் விமானநிலையத்திற்கு ஈரோட்டிலிருந்து சென்ற தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு சளி, காய்ச்சல் இருப்பதைக் கண்டறிந்த பரிசோதனைக் குழுவினர் அவர்களை உடனடியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையிலுள்ள கரோனோ தனிச்சிறப்பு வார்டுக்கு அனுப்பிவைத்தனர்.
அவர்களுடன் ஈரோடு வந்த ஏனைய நான்கு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களும் பெருந்துறை கரோனோ தனிச்சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ரத்த மாதிரிகளின் முடிவு நேற்று வந்ததையடுத்து இருவருக்கு கரோனோ வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டில் தங்கியிருந்த மசூதிகள், அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தீவிர கண்டறிதல் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புக்குள்படுத்தி பராமரிக்கப்பட்டுவருகிறது. இதுவரை கரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறப்பு!