ஈரோடு: கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், சுகந்தி என்பவரின் வீட்டை 2.25 கோடிக்கு வாங்குவதற்கு விலை பேசி 15 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். மீதம் நிலுவையில் உள்ள தொகையைக் கொடுப்பதற்காகவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சேமிப்பு தொகையாக 2.80 கோடி ரூபாயை, புதியதாக வாங்க இருக்கும் வீட்டில் தனி அறையில் வைத்து இருந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் சுதர்சன், அவரது வீட்டிற்குச் சென்று விட்டு, நேற்று மதியம் வந்து புதிய வீட்டைப் பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற போது, வீட்டின் படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே 4 பேக்குகளில் வைத்து இருந்த 2.80 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து சுதர்சன் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டை உடைத்து 2.80 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Audio Leak: ஜாதி பெயரை கூறி ஆபாசமாக பேசிய போலீசார் - வைரலாகும் ஆடியோ!