முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, 2.07 கோடி குடும்பங்களுக்கு முதல் கட்ட கரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட நிவாரண நிதியான, 2,000 ரூபாய், 500 கிராம் சர்க்கரை, ஒரு கிலோ கோதுமை, ஒரு கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் தூள் என, 14 வகை பொருள்களை அரசு வழங்க உள்ளது.
இந்நிலையில் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட உள்ள மஞ்சள் தூளை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது, "தேசிய அளவில் தமிழ்நாட்டில் அதிக மஞ்சள் விளைவதுடன், பிற மாநிலங்களுக்கும் உள் மாவட்டத் தேவைகளுக்கும் விற்கப்படுகிறது. குறிப்பாக, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் அதிகமாக மஞ்சள் விளைகிறது. கரோனா ஊரடங்கால், புதிய மஞ்சள் அறுவடை நடைபெற்று, அவை பாலிஷ் செய்யப்பட்டு குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் மஞ்சள் ஏலமும், கரோனா முழு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில், அரசு சார்பில் 2.7 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்க உள்ள மஞ்சள் தூளை தமிழ்நாட்டிலேயே கொள்முதல் செய்ய வேண்டும்.
இதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகளும் வியாபாரிகளும் பயன் பெறுவர்" என்றார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!