ஈரோடு: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, மக்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம்-பவானி சாகர் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சரக்கு வாகனத்தில் சென்ற புகையிலை வியாபாரி மணிகண்ட சந்தோஷ் என்பவரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். இச்சோதனையில் அவரிடம் இருந்த இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், உரிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்து, சத்தியமங்கலம் கருவூலத்தில் அப்பணத்தை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 695 பேருக்கு கரோனா!