தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (மே-27) நடைபெறுமென்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்துவதற்கான மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி மாமரத்துப்பாளையத்திலுள்ள இந்து கல்வி நிலையத்திலும், கோபி சாரதா கல்வி நிலையத்திலும் இன்று காலை தொடங்கியது. இதுதவிர விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக கூடுதலாக நான்கு துணை மையங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே வாகன வசதி கொண்ட ஆசிரியர்கள் தங்களது வாகனங்களில் திருத்தும் மையங்களுக்கு வந்தனர்.
இன்று காலை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் அறைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று தொடங்கியுள்ள விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறவுள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் மையத்தில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அறைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிந்தபடி பணியில் ஈடுபட்டுள்ளதுடன் விடைத்தாள்கள் திருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்திடும் வகையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் வசதிகள். முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டு அவற்றை வழங்கிட தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்திடுவதற்காக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை:
கோவையில் பாரதி மெட்ரிக் பள்ளி, அவிலா மெட்ரிக் பள்ளி, சிந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, நேரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, லிஸ்யு மெட்ரிக் பள்ளி என 5 மையங்களிலும் பொள்ளாச்சியில் 4 மையங்களிலும், எஸ்.எஸ்.குளத்தில் 2 மையங்களிலும் ஆக 11 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
3 ஆயிரத்து 200 ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வகுப்புகள் தோறும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும், ஆசிரியர்கள் அனைவருக்கும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்கள் வந்து செல்ல 74 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் அறைக்குள் 8 ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் மையங்களை கண்காணிக்க மையத்திற்கு 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் எப்போது திறக்கலாம்?