மொடக்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், காவல் துறையினர், அரச்சலூர் வெள்ளக்கவுண்டன் வலசு பேருந்து நிறுத்தம் அருகில், சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது பொலிரோ பிக்கப் வேனில், நாமக்கல், தேவனாங்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வந்தார். அவரிடம் 1.45 லட்சம் ரூபாய் இருந்தது. பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பி.வி.சி. பைப்புகளை, கேரளாவில் விற்பனை செய்தவகையில் கிடைத்த பணம் என்றார்.
ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் அதனைப் பறிமுதல்செய்தனர். அதே இடத்தில் பொலிரோ ஜீப்பில் வந்த நாமக்கல், பள்ளிப்பாளையம், ஆவத்திப்பாளையத்தைச் சேர்ந்த அருள்முருகன் என்பவரிடம், 80 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.
இதையடுத்து லக்காபுரம் பரிசல் துறையில், நடத்திய சோதனையில், மாருதி காரில் வந்த ஈரோடு, கச்சேரி வீதியைச் சேர்ந்த அடைக்காப்பானிடம், 63 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.
அதே இடத்தில், ஆந்திராவிலிருந்து வந்த லாரியில், சோதனைசெய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் 10 லட்சம் ரூபாய் இருந்தது. காங்கேயத்துக்கு, கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கு செல்வதாகவும், அதற்குரிய தொகை என்றார் லாரி ஓட்டுநர்.
ஆனால், அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர் அவற்றைப் பறிமுதல்செய்தனர். மொத்தம், 12.88 லட்சம் ரூபாயை மொடக்குறிச்சி தேர்தல் அலுவலர் ஜெயராணி, தேர்தல் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:'புதுக்கோட்டையில் சிக்கிய தங்கம்: மதிப்பு ஆறு கோடிப்பு...!'