ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மதுபானங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 23) தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் நோக்கி வந்த காரை சோதனை செய்வதற்காக காவல் துறையினர் வழிமறித்தனர். ஆனால், காரை நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடி தலைமறைவாகினர்.
![பறிமுதல் செய்யப்பட்ட கடத்திக் கொண்டு வரப்பட்ட கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12231489_madhu.jpg)
இதனையடுத்து காரை பரிசோதித்ததில், பெட்டி பெட்டியாக ஆயிரத்து 171 கர்நாடக மாநில மதுபான பாட்டில்களைக் கடத்திக் கொண்டுவந்தது தெரியவந்தது. உடனடியாக மதுபானங்களைக் கைப்பற்றி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவெண்ணைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமேஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் என்பது தெரியவந்தது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்