திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அதிகமான பிரியாணி கடைகள் மற்றும் சில்லி சிக்கன் கடைகள் உள்ளன. இன்று (ஜூன் 26) இளைஞர் ஒருவர் தென்னம்பட்டி நால் ரோட்டில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு அரை கிலோ சிக்கன் சில்லி வாங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அருகே உள்ள அவரது நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று சிக்கனை கொடுக்கவே, நண்பர்கள் அனைவரும் அமர்ந்து சில்லி சிக்கனை சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்போது சில்லி சிக்கனில் தலைமுடி இருந்ததைக் கண்ட இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், சில்லி சிக்கனனில் சிக்கனை விட மாவின் அளவு அதிகமாகவும் மற்றும் சில்லி நிறத்தின் அளவு அதிகமாகவும் இருந்துள்ளது.
இதனால் கோபமுற்ற இளைஞர் மற்றும் சக நண்பர்கள் இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டறிய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். எனவே கடைக்காரரிடம் ஆதாரத்துடன் செல்ல வேண்டும் என்று எண்ணி சில்லியில் உள்ள மாவுகளைப் பிரித்தெடுத்து ஒரு கவரில் போட்டும் மற்றும் சில்லியில் உள்ள முடியைப் பிடித்துக் கொண்டு சில்லியை தொட்டில் ஆட்டுவது போல் வீடியோ, புகைப்படம் எடுத்தும் அந்த பிரியாணி கடைக்குச் சென்றுள்ளனர்.
பிரியாணி கடையின் முன் சென்ற இளைஞரின் நண்பர், இந்த கடை தானா என இளைஞரிடம் உறுதி செய்து பின் சில்லியிலிருந்து பிரித்தெடுத்த மாவு கவரை எடை போடும்படி கடைக்காரரிடம் கூறினார். கடை ஊழியர்கள் திரு திருவென முழிக்க, கடை உரிமையாளர் சில்லி மாவை எடை போட்டு 120 கிராம் எனக் கூறினார்.
அதை தொடர்ந்து அவர், இந்த மாவு இங்கு வாங்கிய சில்லியிலிருந்தது என்றும், அரை கிலோ சில்லியில் 120 கிராம் மாவு, அதிக ஃபுட் கலை மற்றும் முடி இருந்ததாகத் தெரிவித்தார். கடை உரிமையாளர் பதில் கூற முடியாத நிலையில், அதற்குப் பதிலாக வேறு சில்லியை வாங்கிக் கொள்ளுமாறு கூறவே, இளைஞர்கள் சில்லி வாங்க வரவில்லை தொழிலை நியாயத்துடன் தர்மத்துடன் நடத்துங்கள் அப்படிச் செய்தால் தான் தொழில் நிலைத்து நிற்கும் என்று கூறி சென்றனர்.
இதனை வீடியோவாக எடுத்த ஒரு இளைஞர் காசு கொடுத்து சாப்பிடும் நாம் தரம் சரியில்லை என்றால் கடைக்காரர்களிடம் உரிமையுடன் கேள்வி கேட்க முன்வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள், இது போன்ற தவறுகள் நடக்கும் இடத்தில் இளைஞர்கள் முன் வந்து கேள்வி கேட்பதை வரவேற்பதாக தெரிவித்தனர்.
இதுபோல் அனைத்து இளைஞர்களும் முன் வந்தால் உணவு விடுதிகளில் தரமான உணவு கிடைக்கும் எனவும் தங்கள் பாராட்டுகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை பகுதிகளில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்சி பள்ளிகளிலும் தமிழ்மொழி அவசியம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி