திண்டுக்கல்: பழனி அருகே நெய்க்காகப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் பல ஆண்டுகளாக ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாகச் ஒரு ஜேசிபி வாங்க முடிவு செய்து ஜேசிபி வாகனத்தின் பிரபலமான டீலரான 'ஜெயராஜ் ஜேசிபி' என்ற நிறுவனத்தில் ரூபாய் 35 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் மூலம் புதிய ஜேசிபியை மதுரை கிளையில் வாங்கியுள்ளார்.
மகிழ்ச்சியுடன் வண்டியை ஷோரூமில் இருந்து எடுக்கும் பொழுது ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ஜெயராஜ் நிறுவனத்தினர் இதை சரி செய்து தருவதாகவும் தற்போது நீங்கள் ஊருக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். இரண்டு நாளில் புதிய வாகனத்தை வைத்து வேலை செய்துவிட்டு மாரிமுத்துவிடம் கொடுத்துள்ளனர்.
மகிழ்ச்சியுடன் ஜேசிபி வாகனத்தை எடுத்துக்கொண்டு தொழில் செய்யலாம் என்று வந்த இளைஞர் மாரிமுத்துவிற்கு அடுத்தடுத்து மீண்டும் அதே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. காலை எழுந்தவுடன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும் நிறுவனத்தை அணுகினால் உடனடியாக இன்ஜினியர் வந்து வேலை செய்து கொடுத்து விட்டுச் செல்வதும் என மீண்டும் மீண்டும் அதே தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது வாடிக்கையாகி போனதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் மாரிமுத்து.
இதனை அடுத்து பழனியில் உள்ள ஆயக்குடி ஷோரூமில் வாகனத்தைக் கொண்டு வந்து விட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் வைத்திருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிப் பாகங்களை மாற்றி விட்டுக் கொடுத்துள்ளனர். மீண்டும் மறுநாள் காலை அதே தொழில்நுட்பக் கோளாறு மதுரை கிளையை அணுகிக் கேட்டபோது இரண்டு வருட வாரண்டி உள்ளதாகவும் அதற்குள் 5 லட்ச ரூபாய்க்கே வேலை ஆனாலும் நாங்கள் சரி செய்து தருவோம் கவலை வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மீண்டும் வேலைக்குக் கொண்டு சென்ற மாரிமுத்துவிற்கு வேலையின் போது மீண்டும் மீண்டும் அதே புகார் 25க்கு மேற்பட்ட இன்ஜினியர்கள் வேலை செய்யும் இடத்திற்கே வந்து வேலை செய்துவிட்டுச் செல்வதும் தொழில்நுட்பக் கோளாறு மாறாததால் வாகனத்தை மீண்டும் பழனி ஆயக்குடி ஷோரூமில் ஒப்படைத்து விட்டார்.
இந்த நிலையில் இது குறித்து மாரிமுத்துவிடம் கேட்டபோது, "எனக்கு இந்த வண்டியே வேண்டாம் மாதம் 65 ஆயிரம் ரூபாய் தவணை கட்ட வேண்டியுள்ள நிலையில் இரண்டு மாதத்தில் 20 நாட்களுக்கும் மேலாக ஷோரூம்மிலேயே வாகனம் நிற்கிறது. ஒரு மாத தவணை மட்டுமே என்னால் செலுத்த முடிந்தது.
தற்போது மூன்றாவது தவணை வந்து விட்டதால் என்னால் தவணை செலுத்த முடியவில்லை. எனக்கு வேறொரு வாகனத்தை வழங்க வேண்டும் அல்லது ஜெயராஜ் ஜேசிபி நிறுவனம் வாகனத்தை வங்கியில் ஒப்படைத்துவிட்டு என்னை கடனில் இருந்து மீட்டால் கூட போதுமானது நான் வேறு தொழில் எதாவது செய்து பிழைத்துக் கொள்வேன்" என்று மனவேதனையுடன் கோரிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருச்சியில் விரைவில் டைடல் பார்க்… இடம் ஒதுக்கி தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!