திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாகத் திண்டுக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் அளித்த முதற்கட்ட தகவல், "திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நேற்று (டிச.31) சதீஷ் என்ற இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இருவர், சதீஷ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சதீஷ் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு பொதுமக்கள் தீயை அணைத்த பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் தீயில் எரிந்த நிலையில் கிடந்த சதீஷ் என்ற இளைஞரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து, சதீஷ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக அவர் மீது தீ வைத்தனர்? முன்விரோதம் காரணமாக அவர் மீது தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்போது சதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து வரும் நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பலத்த தீ காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.01) உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஆளுநர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமே; மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஜனநாயக விரோதம் - எம்எல்ஏ ஜவாஹிருல்லா!