திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ஃபேஸ்புக் மூலம் இணைந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ’பசியில்லா நத்தம்’ என்ற அமைப்பை நடத்திவருகின்றனர். பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள், முதியோர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக இவர்கள் உணவளித்து வந்தனர்.
அந்த வகையில், நத்தம் மாவட்டம் சிறுகுடி பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள் என்ற பாட்டிக்கு கரோனா ஊரடங்கில் உணவு பொருள்களை வழங்கச் சென்றனர். அந்த சமயத்தில்தான் சின்னம்மாள் பாட்டி உறவினர்களால் கைவிடப்பட்டது குறித்து அவ்வமைப்பினருக்கு தெரியவந்தது. அதுமட்டுமின்றி மழையிலும், வெயிலிலும் சிதிலமைடைந்த வீட்டில் அல்லல்படும் பாட்டிக்கு புது வீடு கட்டித்தர இவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக நத்தம், சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளில் நிதி திரட்டப்பட்டது. அரசியல் கட்சிகள், வணிகர்கள் என பலர் தாமாக முன்வந்து நிதியுதவி வழங்கினர்.
அந்த பணத்தைக் கொண்டு ஒரு மாதத்தில் சின்னம்மாள் பாட்டியின் வீடு கட்டிமுடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று (ஜூன் 20) பாட்டியின் வீட்டை நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி திறந்துவைத்தார். இவ்விழாவிற்கு வந்த அனைவருக்கும் பசியில்லா நத்தம் அமைப்பு சார்பாக உணவு தயார்செய்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா: உயிரை பணயம் வைத்து மனிதம் காக்கும் எஸ்.டி.பி.ஐ தன்னார்வலர்கள்..!