திண்டுக்கல்: பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் இருப்பது உண்டு. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் என பலருக்கும் பலவகையான பொழுதுபோக்குகள் இருப்பது உண்டு. ஆனால், நம்மில் சிலர் மட்டுமே அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருவோம்.
அப்படி சேகரிப்பவர்கள், உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை நம்மால் பார்க்க முடியும். இதே போல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மூன்று தலைமுறைகளாக அரிதான, பழமையான பொருட்களை சேகரித்து வருகிறது, ஒரு குடும்பம்.
அக்குடும்பத்தில் இரண்டாம் தலைமுறையாக முக்கிய சேகரிப்பாளராக இருக்கிறார், ஜோஸ்வா. 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து ஜோஸ்வாவைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் தலைமுறையாக அவரது மூன்று வயது மகன் கேலப்-பும், இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளார். குறிப்பாக இதுவரை இவர்கள் சேகரித்த பொருட்களை வைத்து, வீட்டையே அருங்காட்சியகம் போல் மாற்றி உள்ளனர்.
எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி, அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பினைப் பார்க்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சேகரிப்பில் ஆர்வமாக உள்ள இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைக்கும் மூவாயிரத்திற்கும் அதிகமாக உள்ள தீப்பெட்டிகளை சேகரித்து வைத்துள்ளனர்.
இதே போன்று பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய 2,000 வகைகளுக்கும் மேலான பறவைகளின் இறகுகளும், உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும், பழங்காலத்தில் எழுதிய ஓலைச்சுவடிகள், உலகில் அழிந்து போன பல பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு மேலாக உள்ள கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் என பல அரிதான பொருட்களை சேகரித்துள்ளனர்.
புத்தகங்கள், இது போன்ற பழைய பொருட்களைக் கொண்டு, தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதுகுறித்து பேசிய ஜோஸ்வா, ”இது போன்ற பொருட்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கண்காட்சியாக வைக்க வேண்டும், என்பது என் ஆசை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கு என்றாலே போனில் விளையாடுவது தான் என ஆகிவிட்டது. எனவே, பழமையை மறக்காமல் இருக்க, அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் இதனைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஒரு காலத்தில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்; இன்று நான் காந்தியவாதி' - பகதூர் சிங்