திண்டுக்கல்: தேனி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விடுதலை பட்டி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் இவரது மனைவியும் தனியார் நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தனர்.
இவர் தேனி பகுதியில் கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதியில் நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது காவல்துறையினருக்கு ரகசியமாக தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் குற்றவாளியைக் கைது செய்து அழைத்து வர விரைந்துள்ளனர்.
அப்போது குற்றவாளியிடம் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இருசக்கர வாகனத்தில் அமர வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
சரியாக அரவக்குறிச்சி தாலுகா மஞ்சு வெள்ளி ஊராட்சி கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் அவர்களது வாகனம் வந்துகொண்டிருந்தபோது திடீரென கஞ்சா வியாபாரி பொன்னுசாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்தார். அதே சமயத்தில் அந்த வழியாக தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் மோதியதில் கஞ்சா வியாபாரி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
விபத்து நடந்த இடம் சரியாக திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளது. அதனால் பலியான கஞ்சா வியாபாரியின் சடலத்தை மீட்டு போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனது கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை, அவர் எந்த தவறும் செய்யவில்லை, நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் நியாயம் கேட்டு தனது 8 வயது மகளுடன் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரியை காவல் நிலையம் அழைத்துச் செல்லும்போது விபத்தில் பலி