திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகேயுள்ள கே.குரும்பப் பட்டியை சேர்ந்த விவசாயி சென்றாயன் (39). இவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். சென்ராயன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மொக்கராஜ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் விசாரணை நடந்தது.
அம்பலமான நாடகம்
அதில் சென்றாயன் மனைவி வனிதாவை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவர் காவல் துறையில் கொடுத்த வாக்குமூலத்தில், தனக்கும் கே .குரும்பப்பட்டியைச் சேர்ந்த அய்யனாருக்கும் (50) திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இடையூறாக இருந்த கணவர் சென்றாயனை இருவரும் இணைந்து கொன்றுவிட்டு நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் வனிதாவை கைது செய்து, நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் முன்னிறுத்தினர். இதனைத் விசாரித்த நீதிபதி மும்தாஜ், வனிதாவை 15 நாள்கள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
அரசு பள்ளி ஆசிரியருக்கு வலைவீச்சு
தகவலறிந்த அய்யனார் தலைமறைவாகிவிட்டார். நிலக்கோட்டை காவல் துறையினர் தனிப்படை அமைத்து, அவரைத் தேடி வருகிறார்கள். கொலையான சென்றாயனுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அய்யனார், பழைய வத்தலக்குண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி: இளம்பெண் உள்பட இருவருக்கு சிறை