திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 13, 14ஆவது வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு குடம் குடிநீர் ரூ.30க்கும், உப்புத்தண்ணீர் ரூ.15க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் தலைமைத் தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குடிநீர் கிடைக்க முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், சிலுவத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.