திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே உள்ள எம்ஜிஆர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 15 நாள்களுக்கு மேலாக கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எம்ஜிஆர் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சராசரியாக வீட்டிற்கு நான்கு பேர் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிப்பதற்கும், கை கழுவுவதற்கும்கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் தண்ணி லாரிகள்கூட இப்பகுதியில் வருவதில்லை. இதனால் தண்ணீரை விலை கொடுத்துக்கூட வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள குழாயில் தாராளமாக 24 மணி நேரமும் தண்ணீர் வருகிறது. அதனைப் பிரித்து எங்கள் பகுதிக்கும் கொடுக்க அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரயில்வே அலுவலகங்கள், பணிமனைகள் திறக்கப்படாது: தென்னக ரயில்வே