திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அமைந்துள்ளது தெப்பத்துப்பட்டி கிராமம். இக்கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அன்றாடப் பயன்பாட்டுக்கான குடிநீருக்கே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பல ஆயிரம் அடி குறைந்து விட்டதால் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டுள்ளன.
இந்நிலையில், எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஆழ்குழாய் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர். தண்ணீர் பிடிப்பதற்காக நாள்தோறும் 12 மணி நேரம் காத்திருக்கின்றனர். இதனால் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கூலி வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை என்கின்றனர்.
இதனிடையே இக்கிராமத்திற்குக் கடந்த ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தண்ணீரும் இரண்டு நாட்கள் மட்டுமே வந்துள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் அமைத்தவர்கள் தரமில்லாத குழாய்களைப் பயன்படுத்தி அமைத்திருப்பதால் தண்ணீரின் வேகம் தாங்காமல் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தினம்தோறும் கிடைக்க வேண்டிய தண்ணீர் மாதத்திற்கு 2 நாள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயை தரமான முறையில் அமைத்து தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.