திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வெளி ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்குச் செல்ல, ஈ-பாஸ் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஈ-பாஸ்ஸை தவறாகப் பயன்படுத்தி, கொடைக்கானலுக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கொடைக்கானல் பகுதியில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் முறையாக அனுமதி வாங்கி, கொடைக்கானலைச் சேர்ந்த நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு கடலூர் பகுதியில் இருந்து அனுமதியின்றி கொடைக்கானலுக்கு மூன்று பேர் காரில் வந்துள்ளனர். அவர்கள் முறையான அனுமதி பெறாமல், திண்டுக்கல்லுக்கு ஈ-பாஸ் பெற்று கொடைக்கானலில் உள்ள தங்களது பங்களாவிற்குச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
இதையும் படிங்க: நாகையில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடுப்புகள் அகற்றம்!