திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் முதல்முறையாக தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குத் தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், நகரின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நாயுடுபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ஊர்வலமாகத் தொடங்கியது. இதனை, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலுள்ள ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சதி செய்வதாகவும், இதற்கு கம்யூனிஸ்ட்கள், நக்சலைட்டுகள் துணைபோவதாகவும் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் துணையுடன் குடியரசு தினத்தன்று மிகப்பெரிய சதித் திட்டம் உருவாக்கப்பட்டு, தேசியக்கொடி இறக்கப்பட்டு தேசவிரோத கொடி ஏற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், உளவுத்துறை சரியாக செயல்படாததன் காரணமாகவே நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டு வருவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: 'தேர்தல் நேரத்தில் நக்சலைட்களால் தமிழ்நாட்டில் கலவரம் உண்டாக வாய்ப்புள்ளது' - இந்து முன்னணி