திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவாரா வரமாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அரசியலுக்கு வரப்போவது இல்லை என ரஜினி தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என ரஜினி ரசிகர்கள் போல் விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், ஜுன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் வருவதால் அவரது ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அடிக்கப்பட்ட போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட " தம்பி வா தலைமை ஏற்க வா" என அண்ணா, கலைஞரை அரசியலுக்கு அழைத்தது போல, முதலமைச்சர் ஸ்டாலின், விஜயை ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ என அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் திமுக கட்சி அலுவலகம் முன்பே ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்