திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்னதாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய பொழுது மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பணிகளுக்கு கூடுதலாக கமிஷன் கேட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் ஆர்.எம் காலனி மூன்றாவது கிராசில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜ், ஆய்வாளர் ரூபா கீதா ராணி தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்று (ஜூன் 23) காலை 7:30 மணி அளவில் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அவரது வீட்டில் உள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் ஆகியவற்றிற்கு முறையாக கணக்கு உள்ளதா? கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று கொண்டு இரண்டு மாதங்கள் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை காரணமாக மாநகராட்சியில் அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றும்போது முறைகேடு: காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் சுகாதார பிரிவில் கொள்முதல் செய்ததில் முறைகேடு தொடர்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் இருவரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், நகராட்சியாக இருந்தபோது கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சுகாதார பிரிவில் லைசால் கொள்முதல் தொடர்பாக பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அப்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி மற்றும் இளநிலை உதவியாளர் சந்தவள்ளி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போதைய காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி தற்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆணையர் மகேஸ்வரி வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுகாதார பிரிவில் இளநிலை உதவியாளர் சந்தவள்ளி என்பவரது வீட்டில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் காலை 7 மணி முதல் கொள்முதல் தொடர்பான விசாரணை மற்றும் ஆவணங்கள் தொடர்பான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், களக்காட்டூரில் வசிக்கும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ் என்பவரது வீட்டில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களோடு சுகாதாரப் பிரிவில் பணியாற்றிய மேலும் இருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சுகாதார பிரிவில் பொதுமக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Karur IT Raid: கரூரில் மீண்டும் வருமானவரி சோதனை!