திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் உலக சாதனை நிகழ்வாக 117 ஏக்கர் பரப்பளவில் 4 மணி நேரத்தில் 6 இலட்சத்து 40,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 16,500 பேர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் இருந்து தேக்கு, சந்தனம், புளியமரம், வேப்பமரம், நவாமரம், பூவரசு, நவாமரம், மகிழம் மரம், மலைமரம், வாதமரம், மகாகனி மரம், அத்தி மரம், பூவரசு உள்ளிட்ட 43 வகையான மரக்கன்றுகளை, நடவு செய்தனர்.
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இரா.சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதியழகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
சுமார் நான்கு மணி நேரத்தில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ததற்காக எலைட் உலக சாதனை (usa) முதன்னை நிர்வாக அதிகாரி முனைவர் ரபி பால்பாக்கி மெடல் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். அதேபோல் உலக சாதனை செய்ததற்காக ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் :- ’பாஜகவைச் சேர்ந்த சில நல்லவர்கள் நேற்று இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நிறுத்த சொல்லி நீதிமன்றம் சென்றனர். அங்கு சரியான கொட்டு வாங்கிவிட்டு திரும்பி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை வருடத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஏழரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பின்றி இருந்த நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்றபோது திட்டமிட்டு களத்தில் இறங்கி குளங்கள், ஏரிகளை தூர் வாரியதோடு மரங்களையும் நட்டு வைத்தோம். அந்த மரங்களை தற்போது பார்க்கும் போது மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் 30 சதவீதமாக வன அடர் காடுகளை உருவாக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் இதுபோன்ற காடுகள் வளர்ப்பதன் காரணம் என்பதை சுற்றுச்சூழல் மேம்படும். கடந்த அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வனத்துறை அமைச்சர் இருந்தார். அம்மா இட்லி சாப்பிட்டாங்க. அம்மா எழுந்திரித்து உட்கார்ந்து அமர்ந்தார்கள் எனக் கூறியவர் பிறகு, நாங்கள் பொய் சொல்லி விட்டோம் என மன்னிப்பு கேட்டார்.
ஆப்பிளுக்கும், மாம்பழத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு வனத்துறை அமைச்சர் இருந்தார். அவரைப்போல் இல்லாமல் தற்போது நமக்கு ஒரு நல்ல வனத்துறை அமைச்சர் கிடைத்துள்ளார்’ எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் - சபரிமலையில் பேனர் வைத்து கோரிக்கை