திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டி மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார் வேல்மணி (49). இவர் பஞ்சம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமாருடன் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில், மதுபானக் கடையில் இருந்து 396 மதுபான பாட்டில்களை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, விளாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், காரில் மது பாட்டில்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டத்திற்குப் புறம்பாக கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், விளாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வேல்மணி, செந்தில்குமார் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.