அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது நிலுவை தொகையை வழங்க வேண்டும், 240 நாள் பணி நிரந்தரம் என்பதை உறுதி செய்ய வேண்டும், அனைவரையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட புறவழிச் சாலையில் அமைந்துள்ள தலைமை போக்குவரத்து அலுவலகத்தில் இன்று இரண்டாம் நாளாக தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி காலை முதலே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காலை, மதிய வேளைகளில் பணிக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் பேருந்துகளை இயக்காமல் பங்கேற்றுள்ளனர்.