திண்டுக்கல்: பழனி அடிவாரம் பகுதியில் கோயிலுக்கு வந்த பக்தரை, திருநங்கைகள் மிரட்டி அவரிடம் பணத்தைப் பறித்துச் சென்றதாகவும், ஊருக்குத் திரும்பக் கூட பணம் இல்லை என்று இளைஞர் கூறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.
பழனி மலை அடிவாரம், சுற்றுலா வாகன நிறுத்தும் இடங்கள், சன்னதி விதி, கிரிவலப் பாதை எனக் கோயில் பக்தர்கள் நிறைந்து காணப்படும் இடங்களில் திருநங்கைகள் ஏராளமானோர் யாசகம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் இருக்கும் திருநங்கைகள் பக்தர்களிடம் இருந்து அதிகளவில் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், மேலும் பக்தர்களின் தலை மீது கை வைத்து யாசகம் கேட்பதும்,
பக்தர்கள் பணத்தைக் கையில் எடுக்கும் போது பெரிய பணம் இருப்பதைப் பார்த்தால் உங்கள் பணத்தைக் கொடுங்கள் சுற்றித் தருகிறோம் என்று தலையில் கை வைத்துக் கூறிவிட்டு பக்தர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பத் தராமல் பத்து ரூபாய், அல்லது 20 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுவதாகவும், புகார் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த உமா சங்கர் (26) என்ற இளைஞர் பழனி மலை முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகப் பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் நோக்கி நடந்து கொண்டு இருந்தபோது, திரு ஆவினின் குடி முன்புறம் அவரை வழிமறித்த இரு திருநங்கைகள் உமா சங்கர் பாக்கெட்டில் இருந்த 200 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தலையில் கை வைத்துச் சுற்றித் தருவதாகக் கூறிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். திரும்பி ஊருக்குக்கூடச் செல்லப் பணம் இல்லாததால் அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்.
மேலும் அவர், தன்னுடைய பணத்தைக் காவல் துறையினர் மீட்டுத் தர வேண்டும் என்று அந்த இளைஞர் ஊருக்குத் திரும்பிச் செல்லக் கூட பணமில்லை என்று கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அடிவாரம் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று இரு திருநங்கைகளையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதே போல மற்றொரு பக்தரிடம் பணம் பிடுங்கிச் சென்ற அவந்திகா என்ற திருநங்கையை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு இளைஞரிடம் பணத்தை பறித்த இரு திருநங்கைகளிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!