'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இது பரப்பர், குண்டர் பள்ளத்தாக்கிற்கு மத்தியில் அமைந்துள்ளது. கொடைக்கானல் என்பதன் அர்த்தமே 'கானகத்தின் கொடை' அல்லது 'காடுகளின் பரிசு' என்பதே ஆகும்.
கொடைக்கானலில் வெள்ளி நீர் வீழ்ச்சி, கொடைக்கானல் செயற்கை ஏரி, ப்ரெயன்ட் பூங்கா, டால்பின் மூக்கு, தலையர் நீர்வீழ்ச்சி, குணா குகை, சூரிய ஆய்வுக்கூடம், பைன் காடு, குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் அருங்காட்சியகம், கோக்கர்ஸ் நடைபாதை, பசுமை பள்ளத்தாக்கு, பியர் சோழா அருவி, தூண் பாறைகள், பாம்பர் அருவி ஆகியவை பிரசித்தி பெற்ற, கண்டிப்பாக காண வேண்டிய சுற்றுலாத் தலங்களாகும்.
காண்போரை மெய் மறக்க வைக்கும் ரம்மியமான சுற்றுச்சூழலால் சுற்றுலாப்பயணிகள் எப்போதும் இங்கு படையெடுத்த வண்ணம் இருப்பர்.
அதனால் பெரும்பகுதி கொடைக்கானல்வாசிகளின் பிரதானத் தொழிலாக சுற்றுலாவே இருந்து வருகின்றது. தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஹோம்மேட் சாக்லேட், யூகலிப்டஸ் தைலம், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டப் பல்வேறு தனித்துவமான பொருட்களையும் வாங்கிச் செல்வர். இவ்வாறு விற்க கூடிய இணைப் பொருட்களுக்கான சிறு கடைகள் மூலமாகவே, பலரும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்றின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தடையால், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட தளர்வுகளுக்குப் பிறகு, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன், இ - பாஸ் பெற்று வரலாம் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் முன்பு போல மக்கள் கூட்டம் வந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது கரோனா இரண்டாம் அலையின் காரணமாக தமிழ்நாடு அரசு மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
சுற்றுலாவை மட்டுமே பிரதானத் தொழிலாக கொண்ட பகுதிகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அதனால் எந்தப் பயனும் இல்லாமல் உள்ளது.
இந்த முறை வழக்கமான சீசன் காலங்களான ஏப்ரல், மே மாதங்களை நம்பி பலரும் கடன் வாங்கி தொழிலை மேம்படுத்த முயற்சித்தனர்.
ஆனால், தற்போது அனைவரும் கடனாளிகள் ஆனதே மிச்சம். சுற்றுலாவை நம்பி பிழைத்து வந்த நடுத்தர வர்க்கத்தினர் குடும்பக்கடன், வாகனக் கடன், படிப்புக் கட்டணம் ஆகியவற்றுக்கு என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணம் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளித்து, தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும். சுற்றுலா முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவைக்கேற்ற நிவாரணம் வழங்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆட்டுக் குட்டிகளுக்கு தாயான பசு - நெகிழ்ச்சி காணொலி!