திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமாக இருந்துவருகிறது. இங்கு கரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போதுவரை கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை இருந்துவந்தது.
இந்நிலையில் சுற்றுலா தடை ஏற்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பியுள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் சுற்றுலாவிற்குத் தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வலுத்துவந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இ-பாஸ் பெற ஆன்லைனில் சுற்றுலா (TOURISM) எனப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் வரலாம் எனக் கொடைக்கானல் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரித்துள்ளார்.
மேலும், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்கள் விரைந்து திறக்கப்படும். ஆனால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திறப்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் எனச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் கொடைக்கானல் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.