திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக-பாமக கூட்டணி வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் கலந்துகொண்டார்.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் லாரி, மினிவேன் போன்ற சரக்கு ஏற்றும் கனரக வாகனங்களில் தொங்கியவாறு கட்சி கொடிகளுடன் ஆபத்தான நிலையில் பயணம் செய்தது பார்ப்பவரை பதைபதைக்க வைத்தது. இந்நிலையில், வாகன விதிகளை மீறி சரக்கு ஏற்றும் கனரக வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு மட்டுமல்ல கட்சிக் கூட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் இதே நிலையே நீடித்து வருகிறது. எனவே, இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிக்கொண்டு செல்லும் இந்த ஆபத்தான பயணங்கள் குறித்து போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.