திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான பாமக கூட்டணி வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ’திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக கட்சிக்கு அதிமுக தலைமை பரிசளித்துள்ளது. உண்மையில் அதிமுக என்ற இயக்கத்தில்தான் அடிமட்ட தொண்டர்களிலிருந்து தலைவர்கள் வரை அனைவரும் உண்மையாக உயிரைக் கொடுத்து உழைக்கக் கூடியவர்கள்’ என பேசி கட்சித் தொண்டர்களை உறையவைத்தார்.
இந்த இயக்கத்தினரிடம் சூதுவாது இருக்காது. ஆனால் எதிரணியில் உள்ள இயக்கத்தினர் அப்படி இல்லை. அதனால் தான் எங்களது கூட்டணி இயற்கையான கூட்டணி என்கிறோம் என்றார். அதே போல அதிமுக என்னும் இயக்கம் தனது வெற்றி கணக்கைத் திண்டுக்கல்லில் இருந்துதான் தொடங்கியது என சுட்டிக்காட்டிய அவர், அன்றிலிருந்து இன்றுவரை திண்டுக்கல் அதிமுகவின் இரும்புக்கோட்டையாக திகழ்கிறது. இதில் யாரும் ஓட்டை போட்டுவிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஏனெனில் அந்த அளவிற்குக் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கட்சியான திமுக இன்று அக்கட்சியுடனே 'கை' கோர்த்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்கு அவர்கள் கூறும் பதில் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. இந்த கூட்டணி 18 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்திடவில்லை என அவர் குற்றம்சாட்டினார். இவர்கள் எங்குக் கூட்டணியைப் பற்றி விமர்சிக்கிறார்கள் என சாடினார்.
இவர்கள் ஏழ்மையை ஒழிப்பதாகக் கூறிவிட்டு ஏழைகளை ஒழித்து விட்டார்கள்; அவ்வளவு ஏன் சுயமாகத் தேர்தல் அறிக்கை தயாரிக்க முடியாமல் எங்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து திமுக காப்பியடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்களை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களித்தால் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஒருநாளும் நிறைவேறாது என அவர் கூறினார்.