திண்டுக்கல்லில், மத்திய பாஜக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்திற்காக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி வந்திருந்தார்.
அப்போது ”மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளனரா?” எனக் கேள்வி எழுப்ப்பட்டபோது அதற்கு பதிலளித்த மகாலட்சுமி, ”மாநிலங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளாகும். நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன? எல்லா மாநிலங்களிலும் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாக செயல்படுகிறார்களா? அந்தந்த மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் கரோனாவை ஒழிக்க முடியும்” என பதிலளித்தார்.
மேலும், கரோனா அதிவேகமாகப் பரவுகிற இந்த நேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ”இது மாநிலம், மாவட்டங்கள் தொடர்பான பிரச்னை. இதுபற்றி கூற நான் வரவில்லை. மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து விளக்க வந்துள்ளேன். அவை குறித்து மட்டும் கேள்விகள் கேளுங்கள். வேறு பிரச்னைகள் பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.
உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், விரைவில் மத்திய அமைச்சர்களும் மாநிலத் தலைவர்களும் கலந்து கொள்ளும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, திருப்திகரமான செய்திகள் கிடைக்க வழி செய்கிறேன்” என பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து திரும்பினார்.