திண்டுக்கல்: தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் இன்று (ஜன.24) காலை 10 மணி முதல் வங்கி செயல்படத் தொடங்கியது. இந்த நிலையில் பெப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்டவற்றுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.
அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த ஸ்பிரேயை, பணியில் இருந்த 3 வங்கி ஊழியர்கள் மீது அடித்து, பிளாஸ்டிக் டேக்கை வைத்து கையை கட்டியுள்ளார். இதனிடையே வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து கொள்ளை முயற்சி நடப்பதை கூச்சலிட்டு கூறியுள்ளார்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலர் உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை பிடித்துள்ளனர். இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மேற்கு காவல் துறையினர், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கலில் ரகுமான் (25) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், வங்கி கொள்ளை காட்சிகள் இடம் பெற்றுள்ள துணிவு திரைப்படம் முதல் பல்வேறு திரைப்படங்களைப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.. 4 பேர் கைது; 9 பெண்கள் மீட்பு!