திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா பண்ணைப்பட்டி அருகே உள்ள செம்பட்டி, ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். காரை கேரள மாநிலம் கரமணையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். காரில் அபிஜித் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
கார் டி.பண்ணைப்பட்டி அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரை தாண்டிச்சென்று சாலையின் எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னிவாடி காவல் துறையினர், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த 7 பேரை சிகிச்சைக்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சைக்காக வந்த ஒரு பெண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...